பிரித்தானியாவின் அமைச்சரவை செயலாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் டேம் அந்தோனியா ரோமியோ, நியூயோர்க்கில் சிரேஷ்ட இராஜதந்திரியாக பணியாற்றிய காலத்தில் ஊழியர்களைத் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பத்தாண்டுகளுக்கு முன்பு நியூயோர்க்கிற்கான பிரித்தானிய தூதராக இருந்தபோது, ஊழியர்களிடம் மரியாதைக்குறைவாக நடந்துகொண்டதாகவும், பணியிடத்தில் பயம் மற்றும் கவலை நிலவிய சூழலை உருவாக்கியதாகவும் ஆவணங்கள் வெளிவந்துள்ளன.
மேலும், அரசாங்க நலன்களை விட தனிப்பட்ட சுய விளம்பரத்திற்கும் சமூக வலைத்தளச் செயல்பாடுகளுக்கும் முன்னுரிமை வழங்கியதாக சிலர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இருப்பினும், இவ்விவகாரத்தில் ஒரே ஒரு அதிகாரப்பூர்வ முறைப்பாடு மட்டுமே கிடைத்ததாகவும், விசாரணையின் பின்னர் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனத் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவை அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆனால் முன்னாள் அதிகாரிகள்பல ஊழியர்கள் அவதிப்பட்டதாகக் கூறியுள்ள நிலையில், அக்காலகட்டத்தில் சுமார் 47 விழுக்காடு ஊழியர்கள் பணியிடத் துன்புறுத்தலை அனுபவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது உள்துறை அமைச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றும் அந்தோனியா ரோமியோ, சவாலான பணிகளைச் செய்து முடிக்கும் திறமை கொண்டவர் என சிலர் பாராட்டினாலும், இத்தகைய சர்ச்சைகள் அவர் சிவில் சேவையின் மிக உயர்ந்த பதவியான அமைச்சரவை செயலாளர் பதவிக்கான நியமனத்தில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
